Friday, 5 December 2014

Kaalaththin Vegam.....!

                                                       
                                                              காலத்தின் வேகம் ....!

  மேலே உள்ள  ' விக்ரன்ட்  ' கடிகாரத்தின் வயது --(என்னிடம் வந்த தினத்திலிருந்து )--முப்பத்தியெட்டு   ஆகும் . கடிகாரத்தின் உள்ளே நீங்கள் பார்க்கும் இரு முகங்கள் 
 வேறு யாருமல்ல. --நானும் என் வாழ்க்கைத் துணைவியாரும்தான் . 

    இந்த கடிகாரம் ,  1976-ம் ஆண்டு ,அக்டோபர் மாதம் 29-ம் நாள் நடைபெற்ற எனது 
திருமணத்தின் போது , எனது தம்பி N .கங்காதரன் ( இப்போது ,புனேயில் பேங்க் ஆப் 
மகாராஷ்டிரா Overseas Branch -ல் Senior Manager ) எங்களுக்குத் திருமண அன்பளிப்பாகக் 
கொடுத்ததாகும் .

   கடிகார முட்களை நோக்குங்கள். இரண்டு முட்களும் ஒன்றாக இணைந்து ஒரே முள் 
போல உள்ளதல்லவா? அது உணர்த்தும் பாடம் என்னவெனில் , வாழ்க்கையில் 
கணவன்-மனைவி இருவரும் ,  ஈருடல்-ஓருயிர் போல இணை பிரியாது ,சுக--சோகஙகளை 
ஒருசேர எதிர்கொண்டு ,வாழ்க்கையில் முன்னேறி, வெற்றி வாகை சூடவேண்டும் என்பதேயாகும் .

  ஆண்டுகள் முப்பத்தியெட்டு நிறைவுற்றாலும் , இன்னும் /இன்றும்  இக்கடிகாரம் செவ்வனே 
தன் ஓட்டத்தைச் சீராகச் செய்துகொண்டுதான் இருக்கிறது. அதுபோலவே, எங்கள் வாழ்வும் 
சீராகச் சென்று கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் ,பெருமிதமும் 
பெருமையும் அடைகின்றேன். 

  நேற்றுதான் எங்கள் திருமணம் நடைபெற்றது போல் உள்ளது. இதோ, திரும்பிப் பார்ப்பதற்குள் 
ஆண்டுகள் முப்பத்தியெட்டு பறந்துவிட்டது....! என்னே காலச் சுழலின் கடும்வேகம் ....!!!

  இதனைப் படித்த அனைத்து 'முகநூல் ' நண்பர்களுக்கும் நன்றி .வாழ்க வளமுடன் ,நலமுடன்!

  நன்றி . வணக்கம் .

 நீல சுந்தரம்.

  (பின் குறிப்பு: இக்கடிகாரம் , முப்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன் , சென்னை மவுண்ட் ரோடு 
(இன்றைய அண்ணா சாலை) , வி .ஜீ .பன்னீர்தாஸ் கடையில் ,ரூபாய் எழுபத்தியெட்டுக்கு 
வாங்கப் பட்டது.)
 

Thursday, 2 October 2014






                                                     

        அதர்மச் சிந்தனைகள் அறவே மறையட்டும் !
        ஆன்மீகச் சிந்தனைகள் எங்கும் மலரட்டும் !
        இனிய சகோதரத்துவம் எல்லோரிடத்தும் பரவட்டும் !
        ஈரேழு உலகத்தும் அமைதி ஆட்சி புரியட்டும் !  !
        உலகம் முழுவதும் உண்மை அன்பு தொடங்கட்டும் !
        ஊர் முதல் உலகம் முழுவதும் நற்பண்பு குடியேறட்டும் !
        எல்லோரிடத்தும் இனிய சிந்தனைகள் பிறக்கட்டும் !
        ஏமாற்றம் மறைந்து ஏற்றம் மிக்க வாழ்க்கை வளரட்டும் !
        ஐயமேயின்றி , அனைத்து நாடுகளும் அமைதி விதைக்கட்டும் !
        ஒற்றுமை உணர்வு அனைத்து மக்களிடமும் மலரட்டும் !
        ஓரிடத்தும் அதர்மம் ஒளிய இடமின்றிப் போகட்டும் !
        "ஔடதம் ,அன்பு ஒன்றே..."-ஆதலின் ,அவ்வன்பு பரவட்டும் !
         அஹ்தொன்றையே,அனைத்து மதக் குருக்களும் போதிக்கட்டும் !

Monday, 15 September 2014

VALAI



                                                                வலை !

( இன்றைய கால கட்டத்தில் , இணையதளம் நமது அன்றாட வாழ்க்கையில்  இன்றியமையாத 
ஒரு அங்கமாக ஆகி விட்டது. அதிலும் , Net என அழைக்கப்படும் வலை , நம் அனைவரையுமே 
வளைத்துப் போட்டு விட்டது. அந்த  " வலை " பற்றி என் மனதில் தோன்றியதை உங்களுடன் 
பகிர்ந்து கொள்ள விழைந்ததன் விளைவே  இச்சிறு  " வலை "க் கவிதை ...)


                                                                             " வலை "

        அங்கிங்கென்னாது எங்கும் வியாபித்து விட்டது வலை !
        ஆண்டவனும் ,ஆன்மீகமும் கூட தம் வளர்ச்சிக்கு நாடுவது வலை !
        இளைய தலைமுறையினரைத் தன் கொத்தடிமையாக்கி விட்டது வலை !
        ஈரேழு உலகையும் ஆட்டிப் படைக்குது வலை ! 
       உலகையே சுருக்கிக், கணிணித் திரையில் காட்டுது வலை !
        ஊடுருவிப் பாய்ந்து பாய்ந்து உலகையே கலக்குது வலை !
        எவ்வினாவிற்கும் எப்போதும் ' எலி ' அசைவில் விடையளிக்குது வலை !
        ஏழை-பணக்காரர் எல்லோரையும் கவர்ந்திழுக்குது  வலை !
        ஐயமேயில்லை , இளசுகளைக் காதலில் சிக்க வைக்குது வலை !
         ஒவ்வொரு பெற்றோரையும் ஆழ் கவலையில் ஆழ்த்துது வலை !
         ஔடதமா...ஆலகால விஷமா ...இவ் வலை...?
         அஹ்தொன்றே கவலை..விடை நம் கையில்..விடுக கவலை ! 
                                                            வளர்க  வலை !  

Monday, 4 November 2013

Trunelveli Papankulam Vadakkuvasal Selvi Amman

திருநெல்வேலி பாப்பான்குளம் வடக்கு வாசல் செல்வி அம்மன்கோவில் .

    பாப்பான்குளம் , திருநல்வேலி --கடையம் (வழி; முக்கூடல்) பேருந்து தடத்தில் அமைந்துள்ளது.
ஒரு சிறிய கிராமம்.இங்கு , எங்கள் குலதெய்வம் " அருள்மிகு.வடக்குவாசல் செல்வி அம்மன் கோவில் "
உள்ளது. மேற்கூறிய ,வழித்தடப் பேருந்தில் ஏறி , மடவார்விழாகம் என்ற இடத்தில் இறங்க வண்டும்.
அங்கிருந்து சிறிது தூரத்தில்தான் கோயில் அமைந்துள்ளது. நடந்து போகும் தூரம்தான். 

     இங்கு கோயில் கொண்டுள்ள  வடக்குவாசல் செல்வி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகும் .
ஆடி மாதம் சென்று --குறிப்பாக செவ்வாய்/வெள்ளி கிழமைகளில் -- பூசை செய்து ,பொங்கலிட்டு வழி படுதல் 
சிறப்பாகும். அம்மனது திருவுருவச் சிலை நல்ல திருத்தமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. மிகவும் புராதானமான 
கோயில் இது . 
   
    நான் , சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே , இக்கோயிலுக்கு வருடம் தவறாது போய்க்கொண்டிருக்கிறேன் .
அண்மையில், பிப்ருவரி 2013 சென்று வந்தேன். தற்சமயம் , கோவில் சிறிது சிறிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு 
வருகிறது. 

    நல்ல  முறையில் பராமரிக்கப்பட்டு ,அன்றாட பூஜைகள்  செவ்வனே செய்யப்பட்டு வருகிறது. 

    நன்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் முன் , பூஜை செய்யப்படும் பொழுது அமர்ந்து , கண்களை மூடிக்கொண்டு 
மனமுருகப் பிரார்த்தனை செய்தால் , நாம் வேண்டிக்கொள்வது கண்டிப்பாக நிறைவேறும். பலர் நல்ல பலன் 
பெற்றுள்ளனர். பெற்று வருகின்றனர் . வந்து பலன் பெற்றவர்கள் ,மீண்டும் மீண்டும் வந்து வழிபடுகின்றனர்.

   இக்கோயில் , நிர்வாகத்தை திறம்பட நடத்தி வந்த காளி சேர்வை அவர்கள் அண்மையில் தான் இயற்கை 
எய்தினார்கள். தொடர்ந்து, அவரது இளைய சகோதரர் , நிர்வாகப் பணியை நல்ல முறையில் செய்து வருகிறார்கள். 

  இக்கோயிலுக்குச் செல்ல விரும்புவோர், காளி  சேர்வையின் மகன் ஏகாம்பரம் அவர்களைத் தொலைபேசி 
மூலம் தொடர்பு கொண்டு , விவரங்கள் அறிந்து கொள்ளலாம். 

  திரு. ஏகாம்பரம் அவர்களின் மொபைல் நம்பர்: 095005 51828 . 

  தாய் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் , நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்த அம்மன் 
  கோயிலுக்குச் சென்று, வழி பட்டு நல்ல பலன் பெறலாம். 

   இந்த வடக்கு வாசல் செல்வி அம்மனை, தெற்கத்தி மூகாம்பிகை என்று கூடக் கூறலாம்.

   என்ன, உடனேயே சென்று ,வடக்கு வாசல் செல்வி அம்மனைத் தரிசிக்க ஆவலாய் இருக்கிறதா ?

   புறப்படுங்கள்... முழு நம்பிக்கையோடு வழி படுங்கள் ....நற்பலன் பெறுங்கள் .

   தெற்கத்தி மூகாம்பிகையாம் ,வடக்கு வாசல் செல்வியை வழிபடுங்கள் ..வாழ்வில் நல பலன் பெறுங்கள் .

   

Sunday, 23 September 2012

Shenkottai Passenger

ஹலோ நண்பர்களே,
  வணக்கம் . நண்பர் திரு கௌஷிக்ராஜா அவர்கள் 'பேஸ்புக்'கில்
  ஒட்டியனுப்பிய செய்தி மூலம் , திருநெல்வேலி ஜங்ஷன் --செங்கோட்டை
 பாசெஞ்சர்  இரயில் மீண்டும் ,புதிய அகல ரயில் தடத்தில் ஓடத் தொடங்கி விட்டதாக 
 தெரிந்து  கொண்டேன். இந்த ரயில் தடமானது மிகப் பழமையானது ஆகும். அப்போது,
 மீட்டர் கேஜாக  இருந்தது. 
    
   நான் சிறுவனாக இருந்த பொழுது, இந்த ரயிலில் பயணம் செய்த அனுபவமே தனிதான்.
          
   அப்போது , நீராவி எஞ்சின்தான் . என்ஜினில் டிரைவர் தவிர ,கரி அள்ளியள்ளி  பாயிலர்க்குள் 
   போடுவதற்கென்று ஒரு உதவியாளரும் இருப்பார். தலையில் ஒரு கைக்குட்டையை ஸ்டெயிலாகக் 
   கட்டியிருப்பார் . கையிலிருக்கும் ஒரு சம்மட்டியால் ,வெகு லாகவமாகக் கரியை அள்ளியெடுத்து 
   போடும் அழகே தனிதான். 

      அப்போது ,திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இரண்டே பிளாட்பாரம்தான் . ஒன்றிலிருந்து 
திருச்செந்தூர் பாசஞ்சர்  புறப்படும் . இன்னொன்று ,செங்கோட்டை ரயிலுக்கு. 

      இருப்புப்பாதையில் ,ரயில் பெட்டிகள் (ஏழு அல்லது எட்டுப் பெட்டிகள் ) நிற்கும் .எஞ்சின் , முன் 
  பகுதியிலிருந்து  தடத்தில் ,மெல்ல மெல்ல பின் நோக்கி வரும் . பெட்டி அருகே வர வர எஞ்சின் 
 வேகம் மிகமிகக் குறையும். ஒரு ரயில்வே பணியாளர், முதல் பெட்டியின் இணைப்புப் பகுதி 
அருகே நின்று கொண்டு, கையை அசைத்து அசைத்துச் சைகை செய்வார். மெல்லமெல்ல எஞ்சின் 
வந்து , இலேசாக ஒரு இடியிடித்து  பெட்டியுடன் இணையும். (இந்த அதிர்வால், பெட்டிகள்  அனைத்தும்
மூன்று அல்லது நான்கு அடி பின்னோக்கி நகரும்.) அப்பணியாளர் , எஞ்சின் -பெட்டி இணைப்பை 
நன்றாக , டைட் செய்து சரி செய்வார். பாசஞ்சர்  செல்லத் தயார்..! (இதற்குப் பெயர், 'எஞ்சின் தொடுப்பது ')

     பெட்டிக்குள் முண்டியடித்து ஏறி ,ஜன்னல் ஸீட்டை  பிடிக்கக் கடும்போட்டி இருக்கும். ஒரு வழியாக ,
எப்படியோ, நான் பிடித்து விடுவேன். முகத்தில் பெரிய வெற்றிப் பெருமிதம்.

     டிங் ...டிங்..டிங்..! ஒன்றுமில்லை , பிளாட்பாரத்தில் , தூணில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் ,ஒரு 
சிறிய தண்டவாளத் துண்டில், ஒரு  இரும்பு துண்டால் பணியாளர் அடிக்கும் ஓசைதான் அது. பெயர் 
'முதல் மணி'...இப்படி ,மூன்று முறை அடிப்பார். மூன்றாவது மணியும் அடிக்கப்படும்.

     ரயில்கார்ட் ,வெள்ளைச் சீருடையில் இருப்பார். மூன்றாவது மணி அடித்ததும், அவர், தனது வாயில் 
விசிலை வைத்து , பெரிதாக ஊதுவார். விசில் சத்தம் காதலி அடைக்கும். கையில் உள்ள பச்சைக் கொடியை 
அசைத்து அசைத்துக் காட்டுவார். 

    டிரைவர் , பூம்பூம் என்று ஹாரன் ஓசை எழுப்புவார். ரெடி....சுக்...சுக்..சுக்..சுக் ...மெல்ல நகரும் ..
    
    நல்ல கறுப்புப் புகை ,குப்குப் என்று வெளி வரும்...அப்படியே வரும் புகை, ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் 
   எனது முகத்திலும், (குறிப்பாகக் கண்ணில் ) உடையிலும் நன்றாகப் படியும். கண்ணில் கரி விழுந்து ,எரிச்சல் 
   எடுக்கும். கண்ணிலிருந்து நீர் வரும்...ஆனாலும் ,ஜன்னல் ஸீட்டை விடமாட்டேன்.

   பயணம் மெல்ல தொடரும்....அம்பாசமுத்திரம் வரும்...! எஞ்சினுக்கு நீர் பிடிக்கும் ஸ்டேஷன் அது. ஒரு 
   அரைமணி நிற்கும். தவலைவடை ,முறுக்கு,எல்லாம் அங்கு வாங்கித் தின்போம். 

   எஞ்சினுக்குத்  தண்ணி பிடித்து முடிந்ததும் , தண்டவாள மணி மூன்று தடவை, விசில், பச்சைக்கொடி....
   மீண்டும் பயணம் தொடரும்...

   இப்படி, ஒரு வழியாகச் செங்கோட்டை போய்ச் சேரும்போது மணி இரவு 9...9.30 ஆகியிருக்கும். 
  
   கரிவிழுந்து ,விழுந்து சிவந்த கண்களோடும்.. கறுப்புப் புகை படிந்த உடையோடும் இறங்குவோம்...

  எப்படியெனினும்,  அந்த ரயில் பயண சுகமே தனிதான்...!

   ஓ , நீராவி எஞ்சினே..  எங்கே போய்  விட்டாய் நீ...?  

Friday, 21 September 2012

அன்பு தமிழ் நண்பர்களே ,
வாழ்த்துக்கள் ! வணக்கங்கள்.
 சிரிப்பு என்பது மனிதஇனத்திற்கே 
கிடைத்த ஒரு  அரிய வரம் ஆகும் .
சிரிப்பில்தான் எத்தனை விதங்கள் !
(கலைவாணர் என் .எஸ். கே. பாடிய 
'சிரிப்புப் பாடலை ' நினைத்துப் பார்க்கவும் )
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் 
' சிரித்து வாழ வேண்டும் ,பிறர் சிரிக்க 
வாழக்கூடாது.' சரிதானே ? சிரிப்பது 
நமது உடலுக்கும் மனதிற்கும் மிகவும் 
நல்லது.! சரி ,இப்போது ,நாம் சிரிப்போம் .
எப்படி சிரிக்க வேண்டும் நாம்...?
 கீழே 'அ ' முதல் 'அஹ் ' வரை வரிசைப்  
படுத்தியுள்ளதைப் படியுங்கள் !சிரியுங்கள் .
கருத்தை எழுதுங்கள்....நன்றி.

நீல சுந்தரம். 
                                     "சிரிப்போம் "
                அன்புடன்  சிரிப்போம் ! சிறிதும் 
                ஆணவமின்றிச் சிரிப்போம் ! என்றும் 
               இன்முகத்துடன்  சிரிப்போம் ! நெஞ்சில் 
               ஈரத்துடன்  சிரிப்போம் ! உளம் திறந்து 
               உண்மையாகச் சிரிப்போம் ! நாம் 
               ஊருடன் கூடி ஒன்றாகச்  சிரிப்போம் !பகட்டின்றி 
               எளிமையாய்  சிரிப்போம் ! எவரையும் 
               ஏளனம்  செய்யாது சிரிப்போம் ! 'அண்டார்டிக் '
               'ஐஸ்' எனக்  குளிர்ச்சியாய் சிரிப்போம் ! மனதில் 
               ஒரு களங்கமும் இன்றிச் சிரிப்போம் ! துயரத்தை 
               ஓடஓட  விரட்டி ஓங்கிச் சிரிப்போம் ! அனைவருக்கும் 
               ஔடதமாகி  அமைதியாய் சிரிப்போம்  ! 
              'அஹ் 'ஹஹ்ஹா ' என எதிரொலியாய் சிரிப்போம் !

(  என்ன நண்பர்களே , சிரித்து ரசித்தீர்களா ,ரசித்துச் 
   சிரித்தீர்களா ? உங்கள் கருத்தை எழுதுங்கள்!) 
 

Saturday, 15 September 2012

En Iniya Thamizh nanbarkale....!

என் இனிய தமிழ் நண்பர்களே ...!
வணக்கங்கள் ! வாழ்த்துக்கள் !
சிறுவனாக இருந்து நான் கண்டு
மகிழ்ந்த சில கிராமத்து நினைவுகளை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
விரைவில் , சந்திக்கின்றேன் .
நன்றி.

நீல்ஸ்  ( நீல சுந்தரம் )