Sunday, 23 September 2012

Shenkottai Passenger

ஹலோ நண்பர்களே,
  வணக்கம் . நண்பர் திரு கௌஷிக்ராஜா அவர்கள் 'பேஸ்புக்'கில்
  ஒட்டியனுப்பிய செய்தி மூலம் , திருநெல்வேலி ஜங்ஷன் --செங்கோட்டை
 பாசெஞ்சர்  இரயில் மீண்டும் ,புதிய அகல ரயில் தடத்தில் ஓடத் தொடங்கி விட்டதாக 
 தெரிந்து  கொண்டேன். இந்த ரயில் தடமானது மிகப் பழமையானது ஆகும். அப்போது,
 மீட்டர் கேஜாக  இருந்தது. 
    
   நான் சிறுவனாக இருந்த பொழுது, இந்த ரயிலில் பயணம் செய்த அனுபவமே தனிதான்.
          
   அப்போது , நீராவி எஞ்சின்தான் . என்ஜினில் டிரைவர் தவிர ,கரி அள்ளியள்ளி  பாயிலர்க்குள் 
   போடுவதற்கென்று ஒரு உதவியாளரும் இருப்பார். தலையில் ஒரு கைக்குட்டையை ஸ்டெயிலாகக் 
   கட்டியிருப்பார் . கையிலிருக்கும் ஒரு சம்மட்டியால் ,வெகு லாகவமாகக் கரியை அள்ளியெடுத்து 
   போடும் அழகே தனிதான். 

      அப்போது ,திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இரண்டே பிளாட்பாரம்தான் . ஒன்றிலிருந்து 
திருச்செந்தூர் பாசஞ்சர்  புறப்படும் . இன்னொன்று ,செங்கோட்டை ரயிலுக்கு. 

      இருப்புப்பாதையில் ,ரயில் பெட்டிகள் (ஏழு அல்லது எட்டுப் பெட்டிகள் ) நிற்கும் .எஞ்சின் , முன் 
  பகுதியிலிருந்து  தடத்தில் ,மெல்ல மெல்ல பின் நோக்கி வரும் . பெட்டி அருகே வர வர எஞ்சின் 
 வேகம் மிகமிகக் குறையும். ஒரு ரயில்வே பணியாளர், முதல் பெட்டியின் இணைப்புப் பகுதி 
அருகே நின்று கொண்டு, கையை அசைத்து அசைத்துச் சைகை செய்வார். மெல்லமெல்ல எஞ்சின் 
வந்து , இலேசாக ஒரு இடியிடித்து  பெட்டியுடன் இணையும். (இந்த அதிர்வால், பெட்டிகள்  அனைத்தும்
மூன்று அல்லது நான்கு அடி பின்னோக்கி நகரும்.) அப்பணியாளர் , எஞ்சின் -பெட்டி இணைப்பை 
நன்றாக , டைட் செய்து சரி செய்வார். பாசஞ்சர்  செல்லத் தயார்..! (இதற்குப் பெயர், 'எஞ்சின் தொடுப்பது ')

     பெட்டிக்குள் முண்டியடித்து ஏறி ,ஜன்னல் ஸீட்டை  பிடிக்கக் கடும்போட்டி இருக்கும். ஒரு வழியாக ,
எப்படியோ, நான் பிடித்து விடுவேன். முகத்தில் பெரிய வெற்றிப் பெருமிதம்.

     டிங் ...டிங்..டிங்..! ஒன்றுமில்லை , பிளாட்பாரத்தில் , தூணில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் ,ஒரு 
சிறிய தண்டவாளத் துண்டில், ஒரு  இரும்பு துண்டால் பணியாளர் அடிக்கும் ஓசைதான் அது. பெயர் 
'முதல் மணி'...இப்படி ,மூன்று முறை அடிப்பார். மூன்றாவது மணியும் அடிக்கப்படும்.

     ரயில்கார்ட் ,வெள்ளைச் சீருடையில் இருப்பார். மூன்றாவது மணி அடித்ததும், அவர், தனது வாயில் 
விசிலை வைத்து , பெரிதாக ஊதுவார். விசில் சத்தம் காதலி அடைக்கும். கையில் உள்ள பச்சைக் கொடியை 
அசைத்து அசைத்துக் காட்டுவார். 

    டிரைவர் , பூம்பூம் என்று ஹாரன் ஓசை எழுப்புவார். ரெடி....சுக்...சுக்..சுக்..சுக் ...மெல்ல நகரும் ..
    
    நல்ல கறுப்புப் புகை ,குப்குப் என்று வெளி வரும்...அப்படியே வரும் புகை, ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் 
   எனது முகத்திலும், (குறிப்பாகக் கண்ணில் ) உடையிலும் நன்றாகப் படியும். கண்ணில் கரி விழுந்து ,எரிச்சல் 
   எடுக்கும். கண்ணிலிருந்து நீர் வரும்...ஆனாலும் ,ஜன்னல் ஸீட்டை விடமாட்டேன்.

   பயணம் மெல்ல தொடரும்....அம்பாசமுத்திரம் வரும்...! எஞ்சினுக்கு நீர் பிடிக்கும் ஸ்டேஷன் அது. ஒரு 
   அரைமணி நிற்கும். தவலைவடை ,முறுக்கு,எல்லாம் அங்கு வாங்கித் தின்போம். 

   எஞ்சினுக்குத்  தண்ணி பிடித்து முடிந்ததும் , தண்டவாள மணி மூன்று தடவை, விசில், பச்சைக்கொடி....
   மீண்டும் பயணம் தொடரும்...

   இப்படி, ஒரு வழியாகச் செங்கோட்டை போய்ச் சேரும்போது மணி இரவு 9...9.30 ஆகியிருக்கும். 
  
   கரிவிழுந்து ,விழுந்து சிவந்த கண்களோடும்.. கறுப்புப் புகை படிந்த உடையோடும் இறங்குவோம்...

  எப்படியெனினும்,  அந்த ரயில் பயண சுகமே தனிதான்...!

   ஓ , நீராவி எஞ்சினே..  எங்கே போய்  விட்டாய் நீ...?  

Friday, 21 September 2012

அன்பு தமிழ் நண்பர்களே ,
வாழ்த்துக்கள் ! வணக்கங்கள்.
 சிரிப்பு என்பது மனிதஇனத்திற்கே 
கிடைத்த ஒரு  அரிய வரம் ஆகும் .
சிரிப்பில்தான் எத்தனை விதங்கள் !
(கலைவாணர் என் .எஸ். கே. பாடிய 
'சிரிப்புப் பாடலை ' நினைத்துப் பார்க்கவும் )
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் 
' சிரித்து வாழ வேண்டும் ,பிறர் சிரிக்க 
வாழக்கூடாது.' சரிதானே ? சிரிப்பது 
நமது உடலுக்கும் மனதிற்கும் மிகவும் 
நல்லது.! சரி ,இப்போது ,நாம் சிரிப்போம் .
எப்படி சிரிக்க வேண்டும் நாம்...?
 கீழே 'அ ' முதல் 'அஹ் ' வரை வரிசைப்  
படுத்தியுள்ளதைப் படியுங்கள் !சிரியுங்கள் .
கருத்தை எழுதுங்கள்....நன்றி.

நீல சுந்தரம். 
                                     "சிரிப்போம் "
                அன்புடன்  சிரிப்போம் ! சிறிதும் 
                ஆணவமின்றிச் சிரிப்போம் ! என்றும் 
               இன்முகத்துடன்  சிரிப்போம் ! நெஞ்சில் 
               ஈரத்துடன்  சிரிப்போம் ! உளம் திறந்து 
               உண்மையாகச் சிரிப்போம் ! நாம் 
               ஊருடன் கூடி ஒன்றாகச்  சிரிப்போம் !பகட்டின்றி 
               எளிமையாய்  சிரிப்போம் ! எவரையும் 
               ஏளனம்  செய்யாது சிரிப்போம் ! 'அண்டார்டிக் '
               'ஐஸ்' எனக்  குளிர்ச்சியாய் சிரிப்போம் ! மனதில் 
               ஒரு களங்கமும் இன்றிச் சிரிப்போம் ! துயரத்தை 
               ஓடஓட  விரட்டி ஓங்கிச் சிரிப்போம் ! அனைவருக்கும் 
               ஔடதமாகி  அமைதியாய் சிரிப்போம்  ! 
              'அஹ் 'ஹஹ்ஹா ' என எதிரொலியாய் சிரிப்போம் !

(  என்ன நண்பர்களே , சிரித்து ரசித்தீர்களா ,ரசித்துச் 
   சிரித்தீர்களா ? உங்கள் கருத்தை எழுதுங்கள்!) 
 

Saturday, 15 September 2012

En Iniya Thamizh nanbarkale....!

என் இனிய தமிழ் நண்பர்களே ...!
வணக்கங்கள் ! வாழ்த்துக்கள் !
சிறுவனாக இருந்து நான் கண்டு
மகிழ்ந்த சில கிராமத்து நினைவுகளை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
விரைவில் , சந்திக்கின்றேன் .
நன்றி.

நீல்ஸ்  ( நீல சுந்தரம் )

Munnirpallam gramam

                                                                           முன்னீர்பள்ளம்.
முன்னீர்பள்ளம் ஒரு சிறிய கிராமம். திருநெல்வேலி ஜங்க்ஷனிலி ருந்து 5 அல்லது 6 கிலோ 
மீட்டர் தொலைவில் உள்ளது . இரண்டே தெருக்கள் கொண்ட சிறிய கிராமம்.
பெருமாள் கோவில் ஒன்றும் ,சிவன் கோவில் ஒன்றும் உண்டு. நான் சிறுவனாக 
இருந்த பொழுது , விடுமுறைக்கு , திருநெல்வேலியி லிருந்து குதிரை வண்டியில் 
போவேன் . அப்போது  மின்வசதி இல்லா கிராமமாக இருந்தது. சாயங்காலம் , தெருவில் 
உள்ள கல் தூணில் ,மேலே மாட்டியிருக்கும் மண்ணெண்ணெய் விளக்கை  ஏற்றி விட்டுப் 
போவார்கள். அந்தி சாயும் வேளையில் ,வீட்டிற்குப் பின்னால் உள்ள கன்னடியன் வாய்க்கால் 
படித்துறையில் ,என் வயது சிறுவர்கள் வட்டமாக உட்கார்ந்து கொள்ளவோம். நடுவில் என் 
பாட்டி அமர்ந்திருப்பாள். பெரிய பாத்திரத்தில் , நன்றாகப் பிசைந்த தயிர் சாதத்தை ,ஒவ்வொரு 
உருண்டையாக உருட்டி ,ஒவ்வொருவர் உள்ளங்கையிலும் வைப்பார்கள் . கூடவே ஒரு 
ஊறுகாயும் இருக்கும். பாட்டி சொல்லும்  நீதிக் கதைகளை , ,ம் ...ம் '  என்று கேட்டுக்கொண்டே 
சாத  உருண்டைகளை உள்ளே தள்ளுவோம்.  அரை மணிக்குள் அண்டா சாதம் காலி. பின் ,
வாய்க்காலில் கை கழுவி விட்டு , அவரவர் வீட்டிற்குப் போவோம் . பகல் முழுவதும் , 
கிளித்தட்டு , கிட்டிப்புள் , கோலி , கொக்கோ ,கண் ணாம் பூச்சி , பம்பரம் போன்ற விளையாட்டு .
சிறுமிகள்  பாண்டி, அம்மானை ,கோலாட்டம் போன்ற விளையாட்டு விளையாடுவார்கள்.
இப்படியே , விடுமுறை முழுவதும் கழிந்து விடும் . அவரவர் ஊர்களுக்கு , கண்ணீரோடு 
விடை பெற்றுச் செல்வோம். மீண்டும் விடுமுறை .....மீண்டும்   சந்திப்பு ....! பொன்னான ,
மறக்கவே முடியாத , ஆழ் மனதில் பதிந்து விட்ட அந்த நாட்களை ,இன்றும் அசைபோடும் 
சமயம் , நம்மையறியாது ,கண்களில் ஒருவிதமான சோகம் கலந்த ஆனந்தக் கண்ணீர் பெருகி ,
கன்னத்தில் வழிந்தோடுகிறதே , அக்கண்ணீ ரை  துடைக்கக் கூட , கைகள் மறுக்கின்றதே ....!
அதுதான்யா , பேரின்பம் .
    இன்றைய  இளந்தலை முறை சிறுவர் /சிறுமியருக்கு இம்மாதிரி ஒரு இனிய அனுபவம் 
கிடைக்குமா? 

Friday, 14 September 2012

pasumai ninaivukal

ஹலோ , அன்பார்ந்த நண்பர்களே ,

வணக்கம் .என்னைப் பற்றி ஒரு சிறிய சுயபுராணம். நான் ,அறுபத்தியாறு வயது இளைஞன்.
 பிறந்தது,வளர்ந்தது,படித்தது எல்லாம்  நெல்லைச் சீமையில்தான். மதிதா இந்து உயர்நிலை 
பள்ளியில் 1962 முடிய படிப்பு; பின், செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பு .அதன்பின்,
சென்னை விவேகானந்தா கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பு.(1967-1969).
    பின், 1976ல் திருமணம் ...முச்சங்கம் வளர்த்த மதுரையம்பதியில் பணி (1990 வரை).
(Pharma Marketing ). நல்ல உண்மையான நண்பர்கள் ஏராளம் உண்டு.இப்போதும் அவர்களோடு 
தொடர்பு கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன். மருத்துவப் பிரநிதிகளிடையே நான் 
" நீல்  சுந்தர் " என்றே அறியப் பட்டேன் . 
   பிறகு, 1990ல் மும்பைக்கு குடியேற்றம் ....இப்போது ,தானே மேற்கு பகுதியில் குடியிருக்கிறேன்.
   பழைய கல்லூரி, தொழில்முறை நண்பர்களைச் சந்தித்து , மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள 
ஆவலாயுள்ளேன். 
  என்னை நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .
நன்றி. வணக்கம்.
 
 அன்புடன்  உங்கள்,
 
நீல் சுந்தர்.